Thursday, March 28, 2013

முள்கிரீடம்

அந்தியின் பொன்மஞ்சள் தேய்த்தொழித்து
வெனிலா ஒளியில் மினுங்கிடும் பேராலயம்
தமக்கு முன்பாகச் செல்பவரின் சமூகத்தில்
குறை சொல்லிப் புலம்பியழும் பெருங்கூட்டம்
பிரார்த்தனை தீர்த்துத் திரும்புகிறவன் பார்வையில்
சாலையில் விரைந்திடும் வாகனங்களின் நடுவே
பிள்ளையேந்தி யாசகம் கேட்கும் யட்சியொருத்தி
நசிந்து விலகிய உடையின் வழி பிதுங்கும் தேகம்
நெடுமரத்தைப் படர்ந்த கொடிகள் விம்மித் தெறிக்க
முதல் கனியின் மீதாக ஊர்ந்திடும் சர்ப்பம்
உயிர்த்தலம் பற்றி உறிஞ்சுகிறான் உலகின் கருணையனைத்தும்
தன்னிலை உணர்ந்தவன் சற்றே நிமிர்ந்திட தென்பட்டது
மரியாய் மாறிப்போன யட்சியும்
கையிருந்த தேவகுமாரனின் விழிகளில் உறைந்த உதிரமும்
முள்கிரீடம் தரித்தவனாய் மீண்டும் ஆலயம் நுழைபவன்
முன்பாய் இருகரம் நீட்டி எதிர்கொண்டவர்
புன்னகையோடே சொல்கிறார்
பிரியமானவர்களே
நானே உங்களுக்கு
வழியும்
சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன்

(வெயில்நதி இதழ் - 3)

கருணயற்றவனின் இரவு

நெருக்கிப் பின்னிய
வலையொரு கரம்
மின்மினிகள் மிதந்தலையும்
தீபம் மறுகரமென
களம் புகும் தேவகுமாரன் விழிகளில்
மிச்சமில்லை கருணையேதும்

சிறுபிள்ளைத் தொட்டிலென
காற்றுக்குள் இலக்கில்லாது
சென்று மீளும் போர்வாள்
அரூபமாய்த் தீட்டும்
வர்ணமில்லா ஓவியம்

மெல்லியதொரு தீண்டலில்
நிசப்தம் கலைத்து
எழுந்தடங்கும் ஒளிச்சிதறல்கள்
சுற்றிச் சுழன்று துடிதுடித்து
வானேகும் உயிர்

சேனமிடப் படாத
நான்கு புரவிகளில்*
தனக்கானதன் மீதேறிப்
பயணத்தைத் தொடரும் மரணம்

(*விவிலிய நம்பிக்கை)

(வெயில்நதி இதழ் - 3)

Wednesday, March 27, 2013

சொற்களின் நீரூற்றும் நிறமற்றப் பச்சோந்தியும்

இருளென்றும் வெளிச்சமென்றும் 
பிரித்தறிய முடியாப் பொழுதுகளாலான 
அடர்கானகத்தின் நடுவே
மலையடிவாரத்தில் தான் தேடிவந்த 
சொற்களின் நீரூற்றைக் 
கண்டுபிடித்தான் மந்திரன்
மட்டற்ற மகிழ்ச்சியுடன் 
அதனுட் புக முற்பட்டவனைத் 
தடுத்து நிறுத்திய மாயக்குரல் 
முன்புதிரைத் தீர்த்தபின்னரே
நீரூற்றுக்குள் நுழையமுடியுமென எடுத்துரைக்க
மந்திரனின் கண்முன் விரிந்தது
அரூபத்திரையில் பொன்னிற எண்களினாலான புதிர்
பின் தொடர்ந்த தனிமையைப் பச்சோந்தி என உருமாற்றி
தோளின் மீது இருத்தியவனாக புதிருக்குள் நுழைந்தான்
பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான எண்களும் 
ஆயிரம் கட்டங்களும் கொண்ட புதிர்
காலத்தோடு  தன்னிருப்பை மாற்றிக் கொண்டேயிருக்க
காலவெளியில் மந்திரனும் சுழன்றபடியே 
எண்களைக் கட்டங்களுக்குள் அடக்கவியலாது
மூச்சுத்திணறிக் கொண்டிருந்தான்
புதிருக்குள் தொலைந்து போயிருந்த 
பச்சோந்தியின் உடம்பிலிருந்து நிறங்கள் உதிரலாயின 
வனமெங்கும் இருளப்பிய கிரகணப் பொழுதில்
புதிரத்தனையும் பொருத்தி முடித்ததாக
நம்பியவன் கண்கள் வலது மூலையின் நிரப்பப்படாத
இரு கட்டங்களில் இடறிவிழுந்தன
பூர்ணசமர்ப்பணமாய் 
வாளெடுத்து தன் கழுத்தை
வெட்டியெறிகையில் 
துண்டாகிய தலை பூஜ்யம்
தனியே கிடந்த உடல் ஒன்று 
தீர்ந்துபோனது புதிர்
நிறமற்ற பச்சோந்தியின் 
கண்ணீர்த்துளிகள்
காற்றில் விசித்தபடி
தனித்தலைகின்றன

(உயிர்மொழி இதழ் - 2)

நான் அமைதியாக இருக்கிறேன்

என் வீட்டின் வரவேற்பறையில்
நாற்காலிகளில் நாம் இருவரும் 
அமர்ந்திருக்கிறோம் எதிரெதிரே 
அருந்திய பின்னும் நிரம்பி வழிந்தபடியே
இருக்கிறது உங்கள் தேநீர்க்கோப்பை
எரியம்புகளென பாய்ந்து கொண்டே
இருக்கின்றன வார்த்தைகள்
நான் அமைதியாக இருக்கிறேன்
நதியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட மீனென
என் முன்பாக
தத்தளித்துத் துடித்தபடி கிடக்கிறது
உங்களுடைய நான்
சின்னதொரு பார்வை
ஆதுரமாய் சில வார்த்தைகள்
தோள்சாய்க்கும் பேரன்பு
ஏதேனும் ஒன்று உங்களை
மீட்டெடுக்கக்கூடும் என்பதாய்
என் கண்களில் ஊடுருவிப் பார்க்கிறீர்கள்
நான் அமைதியாகவே இருக்கிறேன்
யுகங்களாய் கடந்துபோன சில
கணங்களுக்குப் பின் வேறென்ன
என்பதாய் என்னைப் பார்க்கிறீர்கள்
ஒன்றுமில்லை எனத் தலையசைக்கிறேன்
பின்பாக
எதுவும் பேசாமல்
நீங்கள் எழுந்து போனபின்னும்
நுரைத்துச் சுழன்றபடியே இருக்கிறது
பேசப்படாத வார்த்தைகளின்
அமில நீரூற்று

(-மனுஷ்யபுத்திரனுக்கு)

(உயிர்மொழி இதழ் - 2)

Thursday, March 21, 2013

சாம்பல் மிருகங்கள்

சதுரம் வட்டம் முக்கோணம் செவ்வகம்
விதவித வடிவங்களில்
தபால்தலைகளை சேகரிப்பது
ரொம்பப் பிடித்தமானது அபிக்கு
கிடைப்பதற்கரிய தபால்தலைகளை
பத்திரமாக ஒட்டிவைக்கிறாள்
மெலிதான பிளாஸ்டிக் உறைகளுக்குள் போட்டு
எளிதாக கிடைக்கும் மற்ற தபால்தலைகளை
அவள் அழகாக வெட்டி ஒட்டமானும் புலியும் பூனையும் பட்டாம்பூச்சியும்
அபியைப் பார்த்து சிரிக்கின்றன
தன் வாழ்வின் மாபெரும் பொக்கிஷம்
அதுவென நம்பினாள் அபி
பிறிதொரு நாளின் எதிர்பாரா சமயம்
வீட்டில் சட்டென்று பற்றிக் கொண்ட தீயில்
சாம்பலாகிப் போன ஆல்பத்தை பார்த்து
அழுதுகொண்டிருந்த அபியை
என்ன சொல்லி தேற்றுவதெனத் தெரியாமல்
மீண்டும் புதிதாக வாங்கிக் கொள்ளலாம்
என சொன்னவனை நிமிர்ந்து பார்த்து
தபால்தலைகளை வாங்கலாம்
செத்துப் போன புலியும் மானும்
பூனையும் பட்டாம்பூச்சியும்
மறுபடியும் வருமா
கண்கள் கசக்கி கேட்பவளிடம்
பதில் சொல்ல முடியாமல்
திகைத்து நிற்கிறேன் நான்.

(முகுந்த் நாகராஜனுக்கு)

(மந்திரச்சிமிழ் போர்ஹேஸ் சிறப்பிதழில் வெளியானது)

வலி


என் கனவுகளின் வனாந்திரங்களில்
அலைந்து திரிகிறதுன் நினைவுகள்
வன்மம் கொண்ட மிருகமென
இருள் சூழ்ந்த பாதைகளில்
இலக்கற்று சுற்றிக் கொண்டிருக்கிறேன்
இ(எ)ன்றேனும் மழை வரக்கூடுமென
காத்திருக்கிறது நிலம்
ரகசியமாய் காற்றுடன் உரையாடும்
மரங்களின் வேர்களில் வழிந்தோடுகிறது
தொலைந்துபோன காதலின் ஸ்பரிசங்கள்
தோல்வியின் வேதனைகளை தாங்கியபடி
கருமேகங்களென சிறகடித்துப் பறக்கும்
கறுப்பு நிறக் கொக்குகள் வானில்
குருதியின் ருசியறிந்த ஓநாய்கள்
காத்திருக்கின்றன தருணத்தை எதிர்நோக்கி
எங்கிருந்தோ கசியத்தொடங்குகிறது
துரோகத்தின் கொடிய நெடி
மாயமானின் நாபியில் இருந்து
பெருகிப்பெருகி மூச்சடைக்கும்
அந்நெடியில் இருந்து வெகுண்டோடி
கனவுகள் கிழித்து கண்விழித்தவன்
என் படுக்கையில் கிடந்தேன்
இருந்தும் அதிகாலைப் பனியென
உடம்பின் மீது உறைந்து போயிருந்தது
துரோகத்தின் தீரா நெடி

(மந்திரச்சிமிழ் போர்ஹேஸ் சிறப்பதிழில் வெளியானது)

தண்டவாளத் தனிமையில் உருளும் கூழாங்கல்

வெளிர்மஞ்சள் நிற இலைகள்
காத்திருக்கின்றன
சூரியனின் வரவை எதிர்நோக்கி

செடார் மரங்கள் அடர்ந்திருக்கும் மலைச்சரிவில்
சின்னஞ்சிறு செடிகளுக்கு
மழை பொழிய மறுக்கும் மேகங்கள்

விதுரனின் கூழாங்கல்லாய்ச்
சமைந்து நிற்கின்றன
பேசப்படாத வார்த்தைகள்

எப்படிப் பார்த்தாலும்
முதுகினைக் காட்டுவதில்லை
ரசம் போன கண்ணாடிகள்

கைவிடப்பட்ட ரயில் நிலையத்தின்
கடைசி மீதமுள்ள பணியாளன் இவன்

பதில்கள் கிடைக்காதெனத் தெரிந்தும்
தனிமையின் மொழி தொடங்கி
தொலைந்து போகும் நிழல்கள் வரை
துளை வழி கசியும் நீரென
கிளம்பிக் கொண்டே இருக்கும் கேள்விகள்

ஹெம்லாக்கை அருந்தியபின்னும்
காதுகளைத் திறந்தே வைத்திருந்தார்
சாக்ரடீஸ்.

(361 - இதழ் 2)